இலங்கை பாராளுமன்றத்தை நாளை நள்ளிரவில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே கலைக்கக் கூடும் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை கோத்தபாய நியமித்தார்.
இந்நிலையில் இலங்கை பாராளுமன்றத்தின் பதவிக் காலம் மார்ச் 1-ந் தேதியுடன் நான்கரை ஆண்டுகள் நிறைவடைகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்க பாராளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும் அல்லது நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையில்தான் கலைக்கப்பட முடியும்.
இலங்கை பாராளுமன்றத்தை கலைப்பதற்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போதுமான ஆதரவை தரவில்லை. இந்நிலையில் இன்றுடன் பதவி காலம் நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதால் நாளை நள்ளிரவில் நாடாளுமன்றம் கலைக்கப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெற்றது. அப்போது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல நேரம் இல்லை? இதனிடையே இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான நல்ல நேரம் இல்லை என்பதால் ஓரிருநாட்கள் தாமதமாகும் எனவும் சில கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.